தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடத்தப்பட்ட “எண்ணி துணிக” நிகழ்வில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், மாநிலத்தின் சிறந்த 44 மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆனால், அதில் அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் சரியானதா என்ற கேள்வி எழுந்தது. “செருக்கறிந்து சீர்மை மயக்கும் மறுப்போடு மண்ணுச்சொல் வேல் வயப்பட்டு” எனக் குறிப்பிடப்பட்டு, அதற்கு 944-வது திருக்குறள் என ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தக் குறளை சரிபார்க்க விருது பெற்ற மருத்துவர்கள் திருக்குறள் நூலில் தேடிய போது, அந்த எண்ணில் மாறுபட்ட குறள் காணப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், அந்த வாசகம் திருக்குறளில் எங்கும் இல்லாதது என்று உறுதி செய்யப்பட்டதும், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, 13-7-2025 அன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது
அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி.
‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது
குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல். காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் போலிச் சித்திரம், போலிக் குறள் ….இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என பதிவிட்டுள்ளார்.
