வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பெனி மாவட்டத்தில் இந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு  பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த டிசம்பர் முதல் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இந்த நிலையில்  ஷோமிர் குமார் தாஸ் (28) என்ற இந்து நபர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணி நிமித்தமாக ஆட்டோவில் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. தேடுதல் வேட்டைக்கு பின், நேற்று அதிகாலை 2 மணியளவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷபிகுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த வன்முறை அலையில் இதுவரை ஆலைத் தொழிலாளி, மருந்துக்கடை உரிமையாளர், 3 தொழிலதிபர்கள் என மொத்தம் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வங்காளதேச இடைக்கால அரசில் மதச் சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினர் குறிவைத்துத் தாக்கப்படுவது கவலையளிக்கிறது. அங்கு சிறுபான்மையினரின் உயிர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்தத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த இடைக்கால அரசு முற்றிலும் தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறக்கூட அந்நாட்டுத் தலைவர் முன்வரவில்லை. மாறாக, இத்தாக்குதல்கள் அனைத்தும் கற்பனையானவை என அவர் புறந்தள்ளுவது அதிர்ச்சியளிக்கிறது. வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டி வந்த ஷோமிர் குமார் தாஸை கொன்றுவிட்டு, அவரது ஆட்டோவையும் கும்பல் திருடிச் சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.