ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, இஸ்லாமிய சட்டங்களின்படி திருமணம் மற்றும் விவாகரத்துக்கான புதிய குடும்பக் கட்டுப்பாட்டு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்துள்ள இந்த புதிய சட்டத்தில், “கன்னிப் பெண்” திருமணத்திற்கு மௌனமாக இருந்தாலே அதை சம்மதமாக எடுத்துக்கொள்ளலாம் என்ற விசித்திரமான விதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு சிறுவன் அல்லது திருமணமான பெண் அமைதியாக இருந்தால் அதை சம்மதமாகக் கருதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தகுந்த வரதட்சணை மற்றும் சமூகப் பொருத்தத்தைக் காரணம் காட்டி, மைனர் எனப்படும் சிறுவர், சிறுமிகளுக்கு அவர்களது தந்தை அல்லது தாத்தாக்கள் திருமணம் செய்து வைக்கவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

இந்த புதிய சட்டத்தின்படி, கணவன்-மனைவி இடையே ஏற்படும் தகராறுகள், விவாகரத்து, கணவன் நீண்ட காலம் பிரிந்திருப்பது மற்றும் மதமாற்றம் போன்ற பிரச்சனைகளில் தலிபான் நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாகத் தலையிட்டு சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கவும், பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும், வேலைவாய்ப்பு மற்றும் பொது இடங்களுக்கு வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தலிபான் அரசு இந்த புதிய திருமண சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.