ஆஸ்திரேலியாவில் 61 பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமித் சதீஷ் ரஸ்தோகி என்பவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்குள்ள கிளெனெல்க் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நிபுணராகப் பணிபுரிந்து வந்த சுமித் சதீஷ், அங்கு வந்த பெண்களிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.

விசாரணையின் போது, அக்டோபர் 2021 முதல் ஜூலை 2022 வரையிலான குறுகிய காலத்திற்குள் 55 பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்தது மற்றும் 42 பெண்களைக் கடுமையான பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட மொத்தம் 97 குற்றங்களைச் செய்ததாகத் தெற்கு ஆஸ்திரேலியா மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்த நீண்டகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதில் 10 ஆண்டுகள் 10 மாதங்களுக்குப் பரோல் வழங்கப்பட மாட்டாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்ட 2022-ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தண்டனைக்காலம் கணக்கிடப்படுவதால், அவர் 2035-ஆம் ஆண்டில்தான் பரோலுக்குத் தகுதி பெறுவார்.

மேலும், சிறைத் தண்டனை முடிந்த பிறகு அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.