பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் சினிமா பட பாணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான ஆர்கெஸ்ட்ரா நடனக் கலைஞர் ஒருவர், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது கார் ஒன்றில் வந்த இருவரால் கடத்தப்பட்டார்.

சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த குடோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணை, அங்கு ஏற்கனவே காத்திருந்த 4 பேர் உட்பட மொத்தம் 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

வாயைக் கட்டி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து அந்தப் பெண்ணைக் கொடுமைப்படுத்திய அந்தக் கும்பல், பின்னர் அவரை ஒரு அறைக்குள் பூட்டிவிட்டுச் சென்றுள்ளது.

ஆனால், ஒரு நபர் மட்டும் போதையில் அங்கேயே தூங்கிவிட்டார். அந்த நபர் நன்றாகத் தூங்குவதைக் கண்ட அந்தப் பெண், துணிச்சலுடன் அவரது செல்போனை எடுத்து அவசர எண் ‘112’-க்கு அழைத்துத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து அந்தப் பெண்ணை மீட்டனர். அங்கேயே போதையில் கிடந்த முகமது ஜூனைத் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

தப்பியோடிய மற்ற 5 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.