காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவனந்தபுரத்தில் உள்ள மாநிலக் கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, தீபா தாஸ் முன்ஷி, பாலோடு ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது ஒலிபெருக்கி மூலம் தேசிய கீதத்தைப் பாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், தேசிய கீதத்தின் முதல் வரியை பிழையாக உச்சரித்ததாக கூறப்படுகிறது.

 

இருப்பினும், அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அந்தப் பிழையை பொருட்படுத்தாமல், பின்னணியில் தொடர்ந்து தேசிய கீதத்தை பாடினர். இந்த நிகழ்வு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு தர்ம சங்கடமான நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.