மும்பையில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த குடும்ப வன்முறை வழக்கில், பெண்ணின் இரண்டாவது கணவர் தனது முதல் கணவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் அந்தப் பெண் வழக்கில் தோல்வியடைந்தார்.
2005-ஆம் ஆண்டு திருமணமான நிலையில், தனது முதல் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவர் மற்றும் அவரது முதல் மனைவி தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதாகக் கூறி 2009-ஆம் ஆண்டு அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நீண்ட காலப் போரில், முதல் கணவர் அந்தப் பெண்ணிற்கு இடைக்கால பராமரிப்புத் தொகையாக மாதம் 3,200 ரூபாய் வழங்கி வந்தார். இருப்பினும், இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பமாக, அந்தப் பெண் ஏற்கனவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை நிரூபிக்க அவரது இரண்டாவது கணவரையே முதல் கணவர் சாட்சியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்.
மேலும் அந்த நபர் நீதிமன்றத்தில் “ஆம், இவர்தான் என் மனைவி” என்று உறுதிப்படுத்தியதோடு, திருமணத்தை நடத்திய இமாம் மற்றும் கைரேகை நிபுணர்களின் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதனால், ஒரு பெண் மறுமணம் செய்து கொண்டால் அவர் தனது முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை அல்லது பாதுகாப்பு கோர தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்த போரிவலி நீதிமன்றம், 17 ஆண்டுகால இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
