கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக மற்றும் அதன் தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக மகளிரணி மாநாட்டில் ‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்’ என்று அமைச்சர் ஒருவர் பேசுகிறார். டாஸ்மாக்கில் வேண்டுமானால் பாட்டிலுக்கு 10 ரூபாய் திருடி ஜெயிக்கலாம். ஆனால், கோவை மக்களின் மனதை தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே வென்றுவிட்டது. கோவையில் 10-க்கு 10 என்ற உங்கள் கனவு, கனவாகவே இருக்கும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “கோவையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி, இந்த மாவட்டத்தை நாசம் செய்தவர்களை எந்தக் காலத்திலும் இங்கு அனுமதிக்கக் கூடாது. திமுக மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுகவும் பாஜகவும் ‘அடிமை கூட்டணி’ என விமர்சித்துள்ளார். ஆனால், திமுகவை விட அதிக காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது அதிமுகதான்” என்றார்.

“ஆம், அதிமுக ஒரு வகையில் அடிமைக் கட்சிதான். ஆனால், மக்களை எஜமானர்களாக நினைத்து, அவர்களுக்கு அடிமையாக உள்ள கட்சி. அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு அடிமையாக செயல்படுகிறது. திமுக மக்களின் நலனை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படாது” என்று குற்றம்சாட்டினார்.