கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுக கட்சியை கடுமையாக விமர்சித்த நிலையில் அதிமுக ஒரு அடிமை கட்சி தான் என்றும் ஆனால் மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி என்றும் கூறினார். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும் மக்களுக்கான அடிமை தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக மகளிரணி மாநாட்டில் ‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்’ என்று அமைச்சர் ஒருவர் பேசுகிறார். டாஸ்மாக்கில் வேண்டுமானால் பாட்டிலுக்கு 10 ரூபாய் திருடி ஜெயிக்கலாம். ஆனால், கோவை மக்களின் மனதை தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே வென்றுவிட்டது. கோவையில் 10-க்கு 10 என்ற உங்கள் கனவு, கனவாகவே இருக்கும்” என்றார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த 511 வாக்குறுதிகளில், 51 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உலகிலேயே அதிக பொய் பேசுபவர் கனிமொழி. பொய்யிலேயே பேசிப் பொய்யிலேயே வாழும் கனிமொழியை, 2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளனர்” என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும்,“அடுத்த 100 நாள்களில் திமுக 100 பொய்களைச் சொல்லும். அவற்றை நம்பாமல், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். மேலும் “கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவது எங்களின் பொறுப்பு. அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.