பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி முதல் முறையாக பொதுவெளியில் பேசியுள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் ‘அக்னி சோத்’ தொடக்க விழாவில் பேசிய அவர், தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவசரக் கூட்டம் நடைபெற்றதாகவும், அரசின் முழு சுதந்திரத்துடன் பதிலடி நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜெனரல் உபேந்திரா திவேதியின் கூறுகையில், ஏப்ரல் 25-ஆம் தேதி வடக்கு கட்டளைப்பகுதியை பார்வையிட்ட பின் 9 இலக்குகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 7 முக்கிய இலக்குகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகளின் மையப்பகுதியை துல்லியமாகத் தாக்கியது இதுவே முதல்முறை என்றும், இதில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ சதுரங்க விளையாட்டைப் போல சிக்கலானதாக இருந்தது; எதிரியின் அடுத்த நகர்வை கணிக்க முடியாத சூழலில், தொடர்ந்து “செக் மேட்” கொடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், ‘உரி’ மற்றும் ‘பாலகோட்’ போன்ற முந்தைய நடவடிக்கைகளிலிருந்து இந்த ஆபரேஷன் முற்றிலும் மாறுபட்டது என்று அவர் கூறினார். முந்தைய நடவடிக்கைகள் ஏவுதளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை குறிவைத்திருந்தாலும், இம்முறை எதிரி பகுதிக்குள் ஆழமாகச் சென்று மையப்பகுதியை நேரடியாகத் தாக்குவதே நோக்கமாக இருந்தது.

இந்திய விமானப்படையின் துல்லியத் தாக்குதலே எதிரியை நிலைக்குலையச் செய்ததாகவும், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையில் வெற்றி பெற்றதாக கூறுவது “வேடிக்கையாக” மட்டுமே உள்ளதாகவும் தளபதி உபேந்திரா திவேதி வலியுறுத்தினார்.