ஆந்திர மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் பெட்டா மசன்பள்ளியை சேர்ந்த விவசாயி டல்லா வெங்கடேஷ். இவர் தட்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த ராமம்மாவின் மகளை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ராமம்மாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால், ராமம்மா தனியே வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் வெங்கடேஷ் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். மொத்தம் சுமார் ரூ.22 லட்சம் வரை கடனில் சிக்கியிருந்த அவர், கடனில் இருந்து விடுபட காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக தனது மாமியாரை கொலை செய்ய முடிவெடுத்தார்.

ராமம்மா ஆண்டுக்கு ₹755 செலுத்தும் வகையில் ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் எஸ்பிஐயில் ஆண்டுக்கு ₹2,000 செலுத்தி ₹40 லட்சம் காப்பீடு எடுத்திருந்தார். மேலும் வெங்கடேஷ், வேளாண் காப்பீட்டின் கீழ் ₹5 லட்சம் பெற தனது சகோதரர் கருணாகரின் பெயரில் இருந்த நிலத்தை ராமம்மா பெயரில் பதிவு செய்தார்.

தொடர்ந்து, ராமம்மாவை கொலை செய்ய தனது சகோதரர் கருணாகரிடம் உதவி கோரினார். ஏற்கனவே வெங்கடேஷிடம் ₹1.3 லட்சம் கடனாக பெற்றிருந்த கருணாகர், கொலை செய்வதற்கு ப ஒப்புக்கொண்டார்.

ஜூலை 7ம் தேதி, மின் இணைப்புக்காக அதிகாரிகள் வருவதாக கூறி, ராமம்மாவை விவசாய நிலத்திற்கு அழைத்து சென்ற வெங்கடேஷ், மாமியாரை சாலையோரம் உட்கார வைத்துவிட்டு நிலத்திற்கு சென்றுவிட்டார். முன்னதாகவே கருணாகர், சித்திப்பேட்டில் ₹2,500க்கு வாடகைக்கு கார் எடுத்து, எண் தெரியாதபடி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார்.

திட்டப்படி, காரை ஓட்டிய கருணாகர், சாலையோரத்தில் இருந்த ராமம்மாவை மோதி கொலை செய்து, பின்னர் காரில் இருந்த ஸ்டிக்கரை அகற்றி விட்டு வாடகை காரை திருப்பிச் சென்றார்.

வெங்கடேஷ் அதனை ஒரு சாதாரண விபத்தாக காட்ட போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, காப்பீட்டுத் திட்டங்கள், வாடகை கார் ஆகியவற்றை  கைப்பற்றி, வெங்கடேஷ் மற்றும் கருணாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மொபைல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம், பணத்திற்காக ஒட்டுமொத்த குடும்ப உறவையே விற்கும் நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மனிதநேயமே இல்லாத இந்த கொடூரம் சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.