பாகிஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே இரண்டு குழுக்களாகப் பிரிந்து மருத்துவர்கள் போட்டி போட்டுக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

லாகூரில் உள்ள லேடி வில்லிங்டன் (Lady Willingdon) மருத்துவமனையில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அங்கு இரண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரே நேரத்தில் ‘சி-செக்ஷன்’ (C-section) அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அப்போது அங்கிருந்த இரண்டு மருத்துவக் குழுக்களும், யார் சீக்கிரம் அறுவை சிகிச்சையை முடிக்கிறார்கள் என ஒரு விளையாட்டைப் போலப் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.

அங்கிருந்தவர்கள் “சீக்கிரம் முடியுங்கள், யாருடைய டீம் முதலில் முடிக்கிறது என்று பார்ப்போம்” எனக் கூறி வீடியோ எடுத்துச் சிரித்துக் கொண்டிருப்பது பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

நோயாளியின் உயிருடன் விளையாடும் வகையில் மருத்துவர்களின் இந்தச் செயல் பொறுப்பற்றத் தனத்தின் உச்சம் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ஆபரேஷன் தியேட்டருக்குள் வீடியோ எடுக்கப்பட்டது குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஃபாரா தெரிவித்துள்ளார்.