இந்தியாவில் நள்ளிரவு வரை வேலை பார்ப்பது என்பது ஒரு பெருமையான விஷயமாகப் பார்க்கப்படும் வேளையில், ஐரோப்பிய மேலாளர் ஒருவர் தனது இந்திய ஊழியருக்கு அனுப்பிய மெசேஜ் தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு முக்கியமான டீல் தொடர்பாக நள்ளிரவு வரை அந்த இந்திய ஊழியர் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்த அவரது ஐரோப்பிய பாஸ், “இன்றைய வேலை போதும், இப்போதே வேலையை நிறுத்திவிட்டுப் போய் தூங்குங்கள்.

மீதி வேலையை நாளை பார்த்துக்கொள்ளலாம்” என மெசேஜ் செய்துள்ளார். வழக்கமாக இந்திய நிறுவனங்களில் ‘ஓவர்டைம்’ வேலை பார்ப்பது கட்டாயமாக்கப்படும் சூழலில், ஊழியரின் உடல்நலம் மற்றும் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த பாஸின் செயலைக் கண்டு அந்த ஊழியர் நெகிழ்ந்து போயுள்ளார்.

இந்தச் சாட்டிங் ஸ்கிரீன்ஷாட்டை அவர் சமூக வலைதளத்தில் பகிர, அது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நாம் ஒன்றும் உயிரைக் காப்பாற்றும் பணியில் இல்லை, வெறும் எக்செல் ஷீட்களைத்தான் உருவாக்குகிறோம், அது நாளை வரை காத்திருக்கலாம்” எனப் பல நெட்டிசன்கள் ஐரோப்பிய நாடுகளின் வேலை கலாச்சாரத்தைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அதே சமயம், இந்தியாவிலும் இது போன்ற ‘வொர்க்-லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) எப்போது வரும் என்ற கேள்வியையும் பல ஊழியர்கள் ஆதங்கத்துடன் எழுப்பி வருகின்றனர். கடின உழைப்புக்கும், சுரண்டலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிய வைத்த இந்த வைரல் போஸ்ட், தற்போது கார்ப்பரேட் உலகில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.