ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த தின நிகழ்ச்சியில் பேசிய பி.ஆர்.எஸ் (முன்னாள் டி.ஆர்.எஸ்) கட்சித் தலைவர் கே. கவிதா, தெலங்கானா ஆட்சியிலும் கலாச்சாரத் துறையிலும் ஆந்திராவின் எந்தவொரு தலையீட்டையும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஹைதராபாத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள ஆந்திர பிரபலங்களின் சிலைகளை, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு உடைத்தெறிவோம் என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச அரசியல் தலைவர்கள் தெலங்கானா மக்களை இழிவுபடுத்தக் கூடாது என்றும், கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் சிலையைத் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய கவிதா, தெலங்கானாவில் ஆந்திர தலைவர்களின் முகவராகவே முதல்வர் ரேவந்த் ரெட்டி செயல்படுவதால் தான் இத்தகைய சேதங்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் விதவிதமான சிலைகளை நிறுவி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய தலைவர்களைப் போலத் தனக்குப் பொறுமையோ அல்லது பரந்த மனப்பான்மையோ கிடையாது என்று குறிப்பிட்ட அவர், தாங்கள் நிச்சயமாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும், ஆந்திர தலைவர்கள் இதேபோல் தொடர்ந்து செயல்பட்டால் அந்தச் சிலைகள் அனைத்தையும் உடைத்து பார்சல் மூலம் ஆந்திராவிற்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்றும் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.

தங்களது பிரச்சனை ஆந்திர முதலீட்டாளர்களுடன் அல்ல என்றும், தெலங்கானா செயலக விவகாரங்களில் தலையிட நினைக்கும் ஆந்திர அரசியல் தலைவர்களுடன் மட்டும்தான் என்றும் அவர் தனது பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்.