இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை அனைத்து முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் மட்டும் இருந்தால் 4.78 லட்சம் வரை கடன் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு PIB Fact check விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு 4.78 லட்சம் கடன் கொடுப்பதாக பரவி வரும் செய்தி போலியானது என்றும் ஆதார் கார்டுக்கு கடன் வழங்குவது குறித்து அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் வங்கிகளில் ஆதார் கார்டு மட்டும் வைத்திருந்தால் கடன் கிடைக்காது. இதற்கு வாடிக்கையாளரின் வருமானம் மற்றும் கிரிடிட் ஸ்கோர் ஆகியவை தேவைப்படும். எனவே யாரும் இந்த தகவலை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் வங்கி கணக்கு மற்றும் ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.