அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளித்துள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு, அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, வணிகர்கள் அதிமுக-விற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள விக்கிரமராஜா, “தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வழங்கவே இபிஎஸ்-ஐ சந்தித்தேன்; இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் வணிகர்களின் பிரச்சனைகளில் 70 சதவீதத்தை தற்போதைய அரசு தீர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆதரவு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், வணிகர்களின் நலனை உறுதி செய்யும் கட்சிக்கே ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார்.
