தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, ஆண்களின் மனநிலையை ஒப்பிட்டு நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) எழுப்பியுள்ள எதிர் கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும், அவற்றால் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்தும் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தெருநாய்களால் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன; அவை எந்த நேரத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்?” என கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்திற்கு நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஆண்களின் மனதையும் யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.

ஒரு ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான், எப்போது கொலை செய்வான் என யாருக்குமே தெரியாது.

தெருநாய்களின் மனநிலையைக் காரணம் காட்டி அவற்றைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள், அதே தர்க்கத்தின் அடிப்படையில் அனைத்து ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலங்குகள் நல ஆர்வலராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திவ்யா ஸ்பந்தனாவின் இந்தக் கருத்து, தெருநாய்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.