பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூதியானா ஜலந்தர் புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு காலி மைதானத்தில் கிடந்த பிளாஸ்டிக் பேரலுக்குள் வாலிபரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இறந்தவர் மும்பையிலிருந்து 2 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பிய 30 வயதான தவிந்தர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் மூன்று பாகங்களாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பேரலில் அடைக்கப்பட்டிருந்தது. தவிந்தர் வீட்டிற்கு வந்த 15 நிமிடங்களிலேயே வெளியே சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில், அவரை யாரோ மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்திருப்பது உறுதியானது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தவிந்தரின் நண்பரான ஷேரா என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஷேரா தனது கூட்டாளியுடன் சேர்ந்து ஒரு பேரலை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஷேராவைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
