இந்தியாவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளும் சமூகத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றி இருப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சட்டங்கள் மாறினாலும், சமுதாயத்தின் மனநிலை மாறவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு தனது மனைவியை எரித்துக் கொன்ற ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு சம உரிமை, பாகுபாடற்ற வாழ்வு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961), குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் எனப் பல வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. முத்தலாக் ரத்து, வாரிசுரிமைச் சட்டம், ராணுவத்தில் பெண்களுக்கான சம உரிமை எனப் பல்வேறு முற்போக்கான தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், நடைமுறை வாழ்வில் பெண்கள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலிலேயே உள்ளனர்.

அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்பது சோகமான உண்மையாகும். கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 4,48,000 குற்றங்கள் பதிவாகியுள்ளன. வரதட்சணை கொடுமையால் ஆண்டுதோறும் 6,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழக்கின்றனர். பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் வீட்டிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (Domestic Violence) அதிகம் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன.

சமூகத்தில் பெண்களின் கல்வி அறிவு மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருந்தாலும், வீடுகளுக்குள் இன்னும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. பெண்களின் முடிவுகளும், சுதந்திரமும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்களும் வீட்டு வேலைகளின் சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெண்கள் எரிக்கப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் ஏதோ எப்போதாவது நடக்கும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. இவை சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ‘ஆணாதிக்கம்’ என்ற நோயின் அறிகுறியே ஆகும். மேலும் “இத்தனை சட்டங்கள், சீர்திருத்தங்கள் வந்த பிறகும் பெண்களின் உடல், தேர்வுகள் மற்றும் வாழ்க்கை மீதான கட்டுப்பாடு ஏன் இன்னும் தொடர்கிறது?” என்ற கேள்வியை எழுப்பியுள்ள நீதிமன்றம், இதற்கான தீர்வு சட்டங்களிலோ அல்லது நீதிமன்ற அறைகளிலோ இல்லை; அது இந்திய மக்களாகிய நம்மிடமே உள்ளது என்று தனது தீர்ப்பில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.