தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்த நிலையில், இப்போது அக்கட்சியின் தலைவர் விஜய் நேரடியாகவே களம் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட விஜய், தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்க ஆதரவு கோரியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் நீடித்து வரும் திருமாவளவன், விஜய்யின் இந்தத் திடீர் அழைப்பிற்குப் பிறகு தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது. “ஓரிரு நாட்களில் எங்களது முடிவை அறிவிக்கிறோம்” என்று அவர் விஜய்யிடம் உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தவெக-விற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்க முன்வந்துள்ள சூழலில், விசிக-வின் முடிவு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி மலருமா அல்லது புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
