பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தவர் ராகுல் குமார் (2வது ஆண்டு), அதே கல்லூரியில் 1ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தவர் தானு பிரியா. இருவரும் காதலித்து, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், தானுவின் தந்தை பிரேம்ஷங்கர், இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கோபத்தின் காரணமாக, அவர் தனது மகளின் கணவரை கொல்ல முடிவெடுத்து, மாற்றுவேடத்தில் துப்பாக்கியுடன் மருத்துவமனை விடுதிக்கு வந்துள்ளார்.

அங்கு தானு மற்றும் ராகுல் இருந்த இடத்திற்கு நேராக சென்ற அவர், தன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலை நேருக்கு நேர் சுட்டுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த தானு பரிதாபமாக, “என் கணவர் என் மடியில் சாய்ந்தார்… என் தந்தை அவரை என் கண் முன்னே சுட்டார்” எனக் கூறி கதறி அழுதுள்ளார்.

இந்த கொடூரமான சம்பவத்தை பார்த்த ராகுலின் தோழர்கள், கோபத்தில்  பிரேம்ஷங்கரை தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விடுதியின் வெவ்வேறு மாடிகளில் தங்கி வந்து படித்து வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், தானு கூறியதாவது, “எனது தந்தை மற்றும் சகோதரர்களால் எனக்கும் என் கணவருக்கும் உயிருக்கு ஆபத்து” எனக் கூறி, நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு கோரியிருந்தோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் போதிய பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தால், இத்தகைய பயங்கர நிகழ்வு நிகழ்ந்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

காதலுக்காக இணைந்த ராகுல் – தானு தம்பதியரின் கனவைச் சிதைத்த இந்த கொலை சம்பவம், ஜாதி மாபெரும் தடையாகவே இருக்கின்றதா? என்ற சிந்தனையை தூண்டும் வகையில், சமூகத்தில் பெரும் சோகத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.

தற்போது பிரேம்ஷங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.