மத்திய அரசு வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை நேரடியாகக் கொள்முதல் செய்யும் விலையில் ஒரு குவின்டாலுக்கு 1,875 ரூபாயில் இருந்து 2,125 ரூபாயாக மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இந்த 13 சதவீத விலை உயர்வு முடிவு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த புதிய விலை மாற்றத்தினால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு, அரசின் அவசரகால இருப்பு வைப்பு முறையும்பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2025-26 நிதியாண்டில் நாட்டின் வெங்காய உற்பத்தி 307.37 லட்சம் மெட்ரிக் டனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, நாட்டில் வெங்காய தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்றும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதுமான அளவு வெங்காய இருப்பு உள்ளதாகவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், தற்பொழுது நாட்டில் சராசரியாக ஒரு கிலோ வெங்காயம் 31 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் வேளையில், பருவநிலை மாற்றம் காரணமாக சந்தைகளில் வெங்காயத்தின் விலை லேசாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களது புதிய வெங்காய விளைச்சலை வளைகுடா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் போட்டி போட்டுக்கொண்டு ஏற்றுமதி செய்து வருவதால், வரும் நாட்களில் இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி வேகம் சற்று குறையலாம் என இந்திய வியாபாரிகள் கருதுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் காரிஃப் கால வெங்காய பயிர் சாகுபடி 15 நாட்கள் தாமதமாக நடந்து வருவது, கர்நாடகாவின் சில பகுதிகளில் பருவமழை தாமதத்தால் 60 சதவீத அளவிற்கே சாகுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதை சாதகமாகப் பயன்படுத்தி சில வியாபாரிகள் வெங்காயத்தை வாங்கிப் பதுக்கத் தொடங்கியுள்ளனர், ஆனால் தற்போதைய நுகர்வுச் சந்தையில் வெங்காயத்திற்கான தேவை சாதாரணமாகவே உள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.