உத்தரப்பிரதேசம், ராம்பூர்: திருமணமான முதல் நாளிலேயே மணமகன், தனது மணமகளுக்கு கர்ப்ப பரிசோதனை கருவியை (Pregnancy Test Kit) கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், இரு குடும்பங்களுக்கிடையே சண்டைக்கும், பஞ்சாயத்துக்கும் காரணமாக மாறியுள்ளது. அதாவது, திருமணத்திற்குப் பிறகு மணமகள் தனது கணவர் வீட்டிற்கு சென்றதும்  மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரது நண்பர்கள் கூறியதின் அடிப்படையில், அவள் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் அவர் ஒரு பரிசோதனைக்கிட் வாங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக மணமகளிடம் நேரடியாக கூறி, பரிசோதனை செய்யக் கூறியதும், மணமகள் மிகவும் கோபமடைந்தார். உடனடியாக தனது பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மணமகளின் குடும்பத்தினர் மாமியார் வீட்டிற்கு விரைந்து வந்தனர். இரு குடும்பங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. விஷயம் மேலும் பெரிதாக வேண்டாம் என்பதற்காக, பக்கத்து கிராமவாசிகள் தலையிட்டு ஒரு பஞ்சாயத்தை ஏற்பாடு செய்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட அந்த பஞ்சாயத்தில், மணமகன் தனது தவறை ஒப்புக்கொண்டு, தனது மனைவியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டார். இதேபோல் மீண்டும் நடந்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்ததும், சம்பவம் சமாதானமாக முடிந்தது. இந்தச் சம்பவம், திருமணத்தின் நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் ஒருவரை குற்றம் சாட்டும் முன், தகவலை உறுதிப்படுத்தாமல், சந்தேகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குடும்ப உறவுகளைச் சீரழிக்கும் என்பதற்கான ஒரு முக்கிய எச்சரிக்கை இது என சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவுகின்றன.