பீகார் அரசுக்கு எதிராகத் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமலேயே தங்கள் பிள்ளைகளை அமைச்சர்களாக்கி விட்டார்கள். ஆனால், பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுப் படிக்கும் பீகார் இளைஞர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், வேலை கேட்டுப் போராடும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இளைஞர்கள் தங்கள் உரிமையைக் கேட்பதற்காகவே அரசு அவர்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்கு கேட்டபோது கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றச் சொல்வது எப்படித் தவறாகும் என்றும், வேலைவாய்ப்புக்கு எதிரான இந்த அரசு இளைஞர்களுக்கு இழைத்த துரோகத்தைப் பீகார் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் தேஜஸ்வி யாதவ் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
