2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றுப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்ததையடுத்து ‘துப்பாக்கிச் சூடு’ போன்று செய்யும் சைகையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து இந்தியா, ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாக புகார் கொடுத்தது. பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ கொண்ட வரலாற்று பின்னணியால் இந்த செயல் உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், விளையாட்டு மையத்திலிருந்து விலகி இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஃபர்ஹானும், அதேபோல விமானத்தை சுட்டு வீழ்த்தும் சைகை செய்த ஹாரிஸ் ரவூஃபும் இன்று (செப்.26) ஐசிசி விசாரணைக்கு ஆஜரானனர். விசாரணையின் போது, தங்களது செயலில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை என்றும், இது பதான் கலாசாரத்தில் இருக்கும் மகிழ்ச்சி வெளிப்பாடாகும் என்றும் ஃபர்ஹான் விளக்கம் அளித்தார்.

திருமணம் மற்றும் விழாக்களில் இது போன்ற சைகைகள் வழக்கமானவை என்றும் கூறினார். மேலும், தண்டனை தவிர்க்க முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இதுபோன்ற சைகைகள் செய்துள்ளனர் என குறிப்பிட்டார்.

ஊடக அறிக்கைகளின் படி, ஃபர்ஹானின் இந்த விளக்கம் மற்றும் கோலி, தோனி ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தியதன் மூலம், அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. ஆனால், ஐசிசி அவருக்கு ஒரு சின்ன அபராதம் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அவரின் போட்டிக் கட்டணத்தில் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கலாம். போட்டிகளில் பங்கேற்பதற்கான தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹாரிஸ் ரவூஃப், “6-0” என்ற சைகையை செய்து ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவது போல நடித்ததற்கும் விளக்கம் அளித்தார். இது இந்தியாவுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், வெறும் நகைச்சுவையாக மட்டுமே இதை செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஐசிசி அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொண்டு, இதற்கு அரசியல் பின்னணி ஏதும் இல்லையென்று உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, ஹாரிஸ் ரவூஃப் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம் என கருதப்படுகிறது.