தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் திருமணப் புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆசியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற பதிவு என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது. நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிக ரகசியமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
அதன்படி காலை தெலுங்கு முறைப்படி தாலிக் கட்டுதல். மாலை ராஷ்மிகாவின் கலாச்சாரமான குடகு (கொடவா) முறைப்படி சடங்குகள் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்தத் திருமணத்தின் புகைப்படங்களை இந்த ஜோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது.
கடந்த 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியின் போது விராட் கோலி பகிர்ந்த புகைப்படம் 22.9 மில்லியன் லைக்குகளைப் பெற்று ஆசிய அளவில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது விஜய் – ராஷ்மிகா ஜோடியின் திருமணப் புகைப்படம் 24.4 மில்லியன் லைக்குகளைக் கடந்து, ஆசியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற ‘நம்பர் 1’ பதிவாக மாறியுள்ளது.
திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் இணைந்த இந்த ஜோடிக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது அன்பை லைக்குகளாகக் குவித்து வருகின்றனர். திருமணம் எளிமையாக நடந்தாலும், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என இந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
