அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாணவனை உத்திரமெரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பொழுது அவனுக்கு நெஞ்சு சளியை இறக்கும் நெபுலைசர் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு மாஸ்க் தேவை.

ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்கும் கப்பை வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரமேரூர் அரசு மருத்துவமனை சுகாதாரத் துறை இணை இயக்குனர் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.