சர்வதேச முதலீட்டு மாநாட்டில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்துப் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவு குறித்துப் பேசும்போது மிகவும் தரம் தாழ்ந்த மற்றும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். “அவர் (முகமது பின் சல்மான்) என்னைப் புகழ்ந்து தள்ளுவார் என்று நினைக்கவில்லை… ஆனால் இப்போது அவர் என்னிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்” என்று ட்ரம்ப் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சவூதி இளவரசர் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், “அவர் என்னிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது அவருக்கு நல்லது” என்றும் ட்ரம்ப் எச்சரிக்கும் தோனியில் பேசியுள்ளார்.

கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர்களை ‘தோல்வியடைந்தவர்கள்’ என்றும், அமெரிக்கா சரிவை நோக்கிச் செல்வதாகவும் சவூதி இளவரசர் கருதியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், “இப்போது நிலைமை மாறிவிட்டது, அவர் என்னிடம் பணிவாகத்தான் இருக்க வேண்டும். அவரிடம் போய் சொல்லுங்கள், அவர் என்னிடம் நல்லபடியாக இருக்க வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன்புதான் ஈரானுடனான பதற்றமான சூழலில், சவூதி இளவரசரை அமெரிக்காவின் பக்கம் நிற்கும் ஒரு “வீரர்” என்று ட்ரம்ப் புகழ்ந்து தள்ளியிருந்தார். “அவர் ஒரு போராளி. அவர் நமக்காகப் போரிடுகிறார்” என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்த ட்ரம்ப், தற்போது ஒரே வாரத்தில் இப்படித் தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.