ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘கார்க்’ (Kharg) தீவு மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாகும். ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி இங்கிருந்தே நடைபெறுகிறது. இத்தீவின் மீது அமெரிக்கா கண் வைத்துள்ளதற்கு முக்கியக் காரணம், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈரானின் பிடியைத் தளர்த்துவதே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இது பற்றி வெளியான தகவல்களின்படி, அமெரிக்க ராணுவம் கார்க் தீவில் உள்ள ராணுவ நிலைகள் மீது குண்டுவீச்சு நடத்தியது. இது குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப்,
“கார்க் தீவில் உள்ள ஈரானிய ராணுவ நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதைக்கு அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க ஊடகமான ‘ஆக்சியோஸ்’ (Axios) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ட்ரம்ப் நிர்வாகம் கார்க் தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அல்லது முற்றுகையிடத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் ‘ஹார்முஸ்’ நீர்ச்சந்தியை ஈரான் மீண்டும் திறக்க அழுத்தம் கொடுப்பதே அமெரிக்காவின் நோக்கம்.
தற்போது நடைபெற்று வரும் போர்ச் சூழலால், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளதால், அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுக்கத் துணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது
இது பற்றி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “அமெரிக்க ராணுவம் எந்த நேரத்திலும் கார்க் தீவை தனது வசப்படுத்த முடியும். தரைவழி வீரர்களை அனுப்பும் எண்ணம் தற்போதைக்கு இல்லையென்றாலும், ஒரு தலைமைத் தளபதியாக ட்ரம்ப் அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைத்துள்ளார்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் இந்த நகர்வுகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை கார்க் தீவு அல்லது எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டால், அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்புடைய எண்ணெய் திட்டங்கள் அழிக்கப்படும். மிக முக்கியமான ‘பாப்-அல்-மண்டேப்’ (Bab-al-Mandeb) நீர்ச்சந்தியும் மூடப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரும் போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது
