மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள (தரம்காவ்) தாலுகாவின் ரயில் கிராமத்தில், கடந்த மார்ச் 15ஆம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கணேஷ் நவல் பாட்டீல் என்பவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சிறுவனின் தந்தை நவல் பாட்டீல், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பழைய முன்விரோதம் காரணமாக அவனது நண்பன் ஒருவன் கிரிக்கெட் பேட்டினால் நெஞ்சில் பலமாகத் தாக்கியதால்தான் அவன் உயிரிழந்தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தன் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக அவர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்திற்கு அலைந்து திரிந்த நிலையில், மரணத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய புதைக்கப்பட்ட சிறுவனின் சடலத்தை 2 மாதங்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தடயவியல் குழு, வட்டாட்சியர் மற்றும் போலீஸாரின் முன்னிலையில், வீடியோ கேமரா கண்காணிப்போடு சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட போது, அவனது எலும்புக்கூட்டைக் கண்டு தந்தை பாட்டீல் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது.

தற்போது பிரேதப் பரிசோதனைக்காகவும், பஞ்சநாமா செய்வதற்காகவும் சிறுவனின் உடல் துளேயில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும் என்பதால் ஒட்டுமொத்த மாவட்டமே இந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்துக் காத்துள்ளது.