மகாராஷ்டிர மாநிலம் நஸ்ராபூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், அக்கோலா மாவட்டத்தில் 60 வயது முதியவர் ஒருவர் 10 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கோலா மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், 60 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோர், தினக்கூலி வேலைக்காக தினமும் வயலுக்குச் சென்று விடுவர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த முதியவர், கடந்த 4 முதல் 5 நாட்களாக அச்சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

முதியவரின் மிரட்டலால் மிரண்டு போயிருந்த சிறுமி, நேற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ (POCSO) உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த முதியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட முதியவரின் இந்த கீழ்த்தரமான செயலால் அவரது சொந்தக் குடும்பத்தினரே கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இது குறித்து அந்த முதியவரின் மனைவி கூறுகையில், “அண்டை வீட்டு சிறுமி எங்களுக்குப் மகள் போன்றவள். என் கணவர் செய்த இந்தக் காரியத்தால் நாங்கள் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால் நானே அவரைக் கொன்றிருப்பேன்” என ஆவேசமாகக் கூறினார்.

சம்பந்தப்பட்ட முதியவர் பள்ளியில் சத்துணவு சமைப்பவராகவும், சட்டவிரோத மது வியாபாரத்தில் ஈடுபடுபவராகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த காம மிருகத்தைக் கைது செய்து, அவருக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.

எம்.எல்.ஏ ரோகித் பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய ஏன் தாமதம் ஏற்பட்டது என காவல்துறையினரைக் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது போலீசார் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.