மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தடோபா-அந்தாரி புலி காப்பகத்தின் பஃபர் மண்டலத்தில், ‘மாமா மேல்’ (Mama Male) என்று அழைக்கப்படும் ராட்சத உருவம் கொண்ட புலி, பசுவை வேட்டையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புல்ஜாரி கிராமத்திற்கு அருகில் இந்த புலி ஒரு பசுவை வேட்டையாடியுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோவில், அந்த புலி மிக லாவகமாக பசுவின் கழுத்தைப் பிடித்து, விளைநிலங்களுக்கு இடையே இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. கிராமத்திற்கு மிக அருகிலேயே இந்தப் புலி நடமாடி வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Man-animal conflict in chandrapur pic.twitter.com/apnnrzUrPT
— Rakhi Chavhan (@chavhan_rakhi) May 7, 2026
தடோபாவின் பிரம்மாண்டமான ஆண் புலிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ‘மாமா’, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது: இது தடோபாவின் புகழ்பெற்ற ‘சோட்டி தாரா’ மற்றும் ‘யுவராஜ்’ புலிகளுக்குப் பிறந்த குட்டி. தாயைப் பிரிந்த பிறகு, இதை ‘பிஜிலி’ என்ற பெண் புலி (இதன் சொந்த சகோதரி) வளர்த்து எடுத்துள்ளது. பொதுவாக ஆண் புலிகள் தனியாகவே வாழும். ஆனால், இந்தப் புலி மற்றொரு ஆண் புலியான ‘பாஞ்சா’ உடன் இணைந்து வேட்டையாடும் விசித்திரமான குணத்தைக் கொண்டது. இதனாலேயே இதற்கு ‘மாமா’ என்று பெயர் வந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்திலும், சிக்பல்லி வனப்பகுதியில் மெயின் ரோட்டிலேயே இந்தப் புலி ஒரு பசுவை வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கிராம எல்லைக்குள் புகுந்துள்ளதால், ஜனாலா-கேஸ்லாகாட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கால்நடைகளைத் தனியாக மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வனத்துறையினர் ‘மாமா’ புலியின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
