அந்நிய தேசத்தில் மர்ம நபர் ஒருவரால் ஆபத்தை உணர்ந்து தவித்த இளம் பெண் ஒருவருக்கு, அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இந்திய வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அரணாக நின்று காப்பாற்றிய நெகிழ்ச்சியான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
திறந்தவெளி மைதானம் ஒன்றில் இந்திய வாலிபர்கள் குழுவாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு இளம் பெண் பயந்து நடுங்கியபடி பாதுகாப்பு தேடி அந்த இளைஞர்களின் பின்னால் வந்து நின்றுகொண்டாள். அடுத்த சில நொடிகளில், அவளைப் பின்தொடர்ந்து வந்த ஒரு வெள்ளைக்கார ஆசாமி நேராக மைதானத்திற்குள் நுழைந்து அந்தப் பெண்ணை நோக்கி அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.
Group of Indian men playing cricket defend white girl from a creep white man who had been following her🫡 pic.twitter.com/KzOPOfXNUW
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 7, 2026
நிலைமையை உடனடியாகப் புரிந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள், சற்றும் யோசிக்காமல் அந்த நபரை வழிமறித்து அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு வளையமாக நின்றனர். மேலும் அவனிடம், “அவளை விட்டு தள்ளி நில்லு.. உனக்கு என்ன வேண்டும்? நீ யார்? அவளை உனக்குத் தெரியுமா?” என்று மிகக் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பியதோடு, “இங்கிருந்து உடனே கிளம்பு” என்றும் எச்சரித்தனர்.
இருப்பினும் அந்த நபர் அங்கிருந்து நகர மறுத்து அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததால், “உடனே இங்கிருந்து போகவில்லை என்றால் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து போலீசில் காட்டிக் கொடுத்துவிடுவோம்” என்றும் அவர்கள் ஆக்ரோஷமாக எச்சரித்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது அந்தப் பெண் மிகுந்த அசௌகரியத்துடனும் பயத்துடனும் அந்த இந்திய இளைஞர்கள் குழுவின் அருகிலேயே ஒட்டிக்கொண்டு நின்றாள். அந்தப் பெண் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போதுதான் இந்த மர்ம நபர் அவளைப் பின்தொடர்ந்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கணித்து வருகின்றனர்.
ஆபத்தான சூழலில் ஒரு அந்நியப் பெண்ணுக்குத் தயங்காமல் உதவி செய்த இந்திய வாலிபர்களின் இந்த தைரியமான செயலைக் கண்டு வியந்த உலகளாவிய நெட்டிசன்கள் பலரும், “ரியல் ஆண்கள் கிரிக்கெட் மட்டும் விளையாட மாட்டார்கள், மைதானத்தையும் அங்குள்ள மக்களையும் எப்படிக் காப்பது என்றும் அவர்களுக்குத் தெரியும்; கனடாவில் இருந்து இந்த இந்திய வம்சாவளி சிங்கங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று கமெண்ட்களைப் பதிவிட்டு இந்த வீடியோவை இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.
