காலம், நேரம் பார்க்காமல் உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்குப் பொதுவாக டிப்ஸ் கொடுத்து அனுப்பி வைப்பதே வழக்கமாக உள்ள நிலையில், புத்தாண்டு நள்ளிரவில் உணவு வழங்க வந்த ஊழியரைத் தங்கள் கொண்டாட்டத்தில் இணைத்துக் கொண்ட இளைஞர்களின் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒன்று வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்தது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு உணவுடன் வந்த டெலிவரி ஊழியரைப் பார்த்ததும், அந்த நண்பர்கள் உற்சாகமடைந்தனர். அவரை வெறும் கையோடு அனுப்ப மனமில்லாமல், தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர்.

முதலில் தயக்கத்துடன் ஒதுங்கி நின்ற அந்த ஊழியரை, நண்பர்களில் ஒருவர் ஓடிச் சென்று பாசத்துடன் தூக்கிக் கொண்டு வர, ஒட்டுமொத்த நண்பர் பட்டாளமும் அவரைச் சூழ்ந்து கொண்டது. தங்களுக்குள் ஒருவராக அந்த உழைப்பாளியைப் பாவித்து, கேக் ஊட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அந்த ஊழியரும் தனது கூச்சத்தை மறந்து, அந்த நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி புத்தாண்டைக் கொண்டாடினார். “உழைப்பவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் மரியாதை அவசியம்” என்பதை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகி லட்சக்கணக்கானோரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.