அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “இலவசங்களே கூடாது” என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வரும் நிலையில், அத்தகைய கொள்கை கொண்ட பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இபிஎஸ் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்படி நம்ப முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

​பாஜக அரசு மக்களின் நலத்திட்டங்களை அடியோடு அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி நலத்திட்டங்களை அறிவிப்பது முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக வீரபாண்டியன் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் அளிப்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும், பாஜகவின் நிழலில் நின்றுகொண்டு இபிஎஸ் அளிக்கும் இந்த வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.