கன்னட , தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகை மற்றும் திரைவுலகில் அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணி புரிந்த மூத்த நடிகை பி. சரோஜா தேவி இன்று (ஜூலை 14) காலமானார். அவருக்கு வயது 87. வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை இயற்கை எய்தினார். புனித் ராஜ்குமார் நடித்த நடசர்வபௌமா (2019) படம் தான் அவரின் கடைசி திரைப்படமாகும்.
பெங்களூரில் 1938-ஆம் ஆண்டு பிறந்த சரோஜா தேவி, பல மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். அவரது தந்தை பைரப்பா காவல் துறையில் பணியாற்றினார். அவரது தாயார் ருத்ரம்மா, இல்லத்தரசி. சரோஜா தேவி சிறு வயதிலேயே நடனத்தில் திறமை காட்ட, தந்தையின் உற்சாக ஊக்கத்துடன் சினிமாவில் முதல் தடவையாக அறிமுகமானார். பின்னர் தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
அவர் 1967-ல் ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1986-ல் அவரது கணவர் மரணமடைந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அவரது இறுதிச் சடங்குகள் பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி தோட்டத்தில், கணவர் ஹர்ஷாவின் சமாதிக்கு அருகிலுள்ள இடத்தில், பாரம்பரிய முறையில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
