உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்த மானவி மிஸ்ரா (Manvi Mishra) என்ற பெண்ணின் மரணம் தற்கொலையல்ல, ஆனர் கில்லிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மானவி, ஜனவரி 7, 2025 அன்று அபினவ் கத்யார் என்பவருடன் கலப்பு திருமணம் செய்திருந்தார். இதனால் கோபமடைந்த அவரது சகோதரர் வீரு மிஸ்ரா, ஆகஸ்ட் 31 அன்று மானவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், அவரது தாய் சோட்டி பிட்டியாவுடன் சேர்ந்து இதை தற்கொலை போல் காட்டுவதற்காக மானவியின் வலது கையில் துப்பாக்கியை வைத்தனர். ஆனால், குண்டு இடது கன்னத்தில் தாக்கியிருந்ததால், போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மானவியின் கணவர் அபினவ், இது ஆனர் கில்லிங் எனக் கூறி புகார் அளித்திருந்தார். அவர், மானவியின் குடும்பத்தினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், லக்னோ உயர் நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், குடும்பத்தினர் மானவியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு இந்த சம்பவம் நடந்தது. போலீஸ் விசாரணையில், வீரு மிஸ்ரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது வீரு மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டு, வழக்கு மேலும் விசாரிக்கப்படுகிறது.