பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது அரசியல் பாணி, அதிமுக–பாஜக உறவு மற்றும் தலைமை மாற்றம் குறித்து தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டபோது, ஆடிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டி பெரும் கவனம் பெற்றது. அதில், “அண்ணாமலை கொஞ்சம் அதிக வேகத்தில் செயல்பட்டார்; அந்த வேகமே அவரை மாற்ற காரணமாக இருந்திருக்கலாம்” என்று குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், அண்ணாமலை அளித்த பேட்டியின் காணொளியை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க ஆக்ரோஷம் தேவை என நம்புகிறேன். நான் ஆக்ரோஷமானவன் என்பதில் எனக்கு பெருமை உண்டு. அந்த பாணியிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்.” அவரது இந்த ‘ஆக்ரோஷமான’ பாணியே அதிமுக அழுத்தத்துக்குப் பின்னணியாக அமைந்ததா என்ற கேள்விக்கு, அண்ணாமலை தெளிவாக பதிலளித்தார்:  “அது பாஜக தலைமையின் முடிவு. அரசியலில் நிரந்தர நண்பர் இல்லை, நிரந்தர எதிரி இல்லை.”

அதே நேரத்தில், அதிமுகவின் நிலைப்பாடுகளைப் பின்பற்றி முடிவெடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக நீட், மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களில் அதிமுகவுக்கு மாறாக தாம் 100 சதவீதம் ஆதரிக்கிறேன் எனவும் தெரிவித்தார். அரசியலில் தனது நிலைப்பாட்டை மேலும் விளக்கிய அண்ணாமலை, “நான் எப்போதும் ஆக்ரோஷமாகவே இருப்பேன். அதிமுகவுடன் முழுமையாகச் சரிசெய்து செல்லும் சூழல் இல்லை.” அதேநேரத்தில் என்னுடைய ஆக்ரோஷத்தால் நிறையவே இழந்துள்ளேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.