புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து தவெக பொதுச் செயலாளர் (புஸ்ஸி) ஆனந்த் பெற்றுச் சென்றார்.
முன்னதாக, புதுச்சேரியில் சாலை பேரணி நடத்த தவெக முன்வைத்த கோரிக்கையை காவல்துறை நிராகரித்தது. பொதுக்கூட்டம் நடத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆர். கலைவாணனை தவெக நிர்வாகிகள் சந்தித்து, உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினர்.
அதனைத் தொடர்ந்து, உப்பளம் மைதானத்தில் மேடை அமைப்பு, பாதுகாப்பு, நுழைவு–வெளியேறும் வழிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை காவல்துறை துணைத் தலைவர் சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஆகியோர் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இணைந்து நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர், தவெக பொதுக்கூட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை முதல்வர் என். ரங்கசாமியை சந்தித்துக் கொண்டு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பெற்றார். இதன் மூலம், திட்டமிட்டபடி விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் 9 ஆம் தேதி நடைபெறுவதற்கு அனைத்தும் தயாராகியுள்ளது.
இந்த நிலையில் TVK பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசார் சில முக்கிய நிபந்தனைகளை அறிவித்துள்ளனர்: அதன்படிஅதிகபட்சம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி; அனைவருக்கும் க்யூஆர் கோடு மூலம் நுழைவு. அவசர சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயாராக வைக்கப்பட வேண்டும். கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் தனி வழித்தடம் மூலம் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 5,000 பேர் 10 கேபின்களாகப் பிரிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு கேபினிலும் 500 பேர் மட்டுமே. குடிநீர் மற்றும் பொதுவசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்ய தவெக தரப்பு பொறுப்பு. மேலும் இந்த நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு கூட்டம் நடைபெற வேண்டுமென காவல்துறை தெரிவித்துள்ளது.
