மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ந்த ட்விஷா ஷர்மாவின் சந்தேக மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2025-இல் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியின் மகனான வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைத் திருமணம் செய்த ட்விஷா, மே 12, 2026 அன்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது தோழி மீனாட்சிக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பிய கடைசி சாட்டிங் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், “நான் இங்கு மாட்டிக்கொண்டேன் தோழி, நீ இதைப் போல எங்கும் மாட்டிக்கொள்ளாதே; இப்போது என்னால் அதிகம் பேச முடியாது, சரியான நேரம் வரும்போது அழைக்கிறேன்” என்று தனது இயலாமையையும் வலியையும் ட்விஷா பகிர்ந்துள்ளார். மேலும், இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியில், தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் தன்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்வதாக கதறியுள்ளார்.

மேலும் ட்விஷாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரது உடல் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி முதல்வர் இல்லத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியின் குடும்பத்திற்கு எதிரான வழக்கு என்பதால், இதன் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு போபால் காவல்துறை இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.