ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 வயதான சுஷிலா முர்மு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்தில் இருந்து காணாமல் போனார். பல ஆண்டுகள் அலைந்து திரிந்த அவர், கொல்கத்தாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் தஞ்சம் புகுந்து 20 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வந்தார். ஆசிரம ஊழியர்களின் முயற்சியால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது. தனது மகனுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்த சுஷிலா, பெரும் கனவுகளுடன் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றார். ஆனால், அங்கு அவருக்குக் காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி.

அவரது மகன் மதன் பெஸ்ரா, “என் தாய் மீண்டும் இந்து மதத்திற்கு மாறினால் மட்டுமே வீட்டில் அனுமதிப்பேன்” என்று நிபந்தனை விதித்தார். கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றி வரும் சுஷிலா, தனது நம்பிக்கையை விட முடியாது என்று உறுதியாகக் கூறினார். இதனால், பெற்ற தாயை ஏற்க அவரது மகன் மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் அவரது கணவர் இறந்தபோதும் இதே மதப் பிரச்சனையில் கிராமத்தினர் அழுத்தம் கொடுத்ததால் தான் சுஷிலா ஊரை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் கொல்கத்தா ஆசிரமத்திற்கே அவர் திரும்ப வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.