உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் நாகாலாந்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி இரவு 8 மணியளவில் அவர் மாலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைச் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து வந்துள்ளது. அந்த நபர்கள் அவருக்கு எதிராக இனவெறிச் சொற்களைப் பயன்படுத்தியதோடு, ஆபாசமாகப் பேசியும் மிரட்டியுள்ளனர். அதில் ஒருவன் தனது சட்டையைக் கழற்றி மிரட்டியதாகவும், எய்ம்ஸ் கேட் எண் 2 அருகே வைத்து அவரைத் தவறான முறையில் தொட்டதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர் சத்தமிடவே அந்த கும்பல் தப்பியோடியது. இந்தச் சம்பவம் குறித்து அகில இந்திய வசிப்பிட மருத்துவர்கள் சங்கத்தின் வடகிழக்கு கூட்டமைப்பு (NAFORD) முதலமைச்சர் அலுவலகத்தைத் தாக செய்து சமூக வலைதளத்தில் புகார் அளித்தது. தற்போது நான்கு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த நபர்களின் பைக் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.
