ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தெருநாய் ஒன்று கட்டப்பட்டு, மின்சாரம் தாக்கி கொல்லப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், ஒரு தெருநாயைக் கட்டி சுமார் 20 அடி உயரமுள்ள மின்மாற்றி (Transformer) மீது வீசியுள்ளனர். இதில், நாய் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் குறித்து, “ஜெய்ப்பூரில் இரவில் இரத்தம் சிந்துகிறது – இந்தக் கொடூரத் தீர்ப்பின் முதல் பலி இதுவே! ஆதரவற்ற தெரு நாய் ஒன்று மின்மாற்றியில் கட்டப்பட்டு மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டுள்ளது” என்ற உணர்ச்சிப்பூர்வமான தலைப்புடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
வீடியோவில், இரண்டு மூன்று பேர் மின்மாற்றி மீது ஏறி நாயின் உடலைக் கீழே இறக்கி அதன் பராமரிப்பாளரிடம் ஒப்படைக்கின்றனர். இறந்த நாயின் உடலை வாங்கிய அந்தப் பராமரிப்பாளர், அலறி அழுதுகொண்டே அதை எடுத்துச் செல்லும் காட்சி காண்போரின் மனதை உருக்குவதாக உள்ளது.
View this post on Instagram
“>
இந்த கொடூர சம்பவத்துக்கு நடிகை சோனம் பாஜ்வா உள்ளிட்ட பல விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் இணைய பயனர்கள் தங்கள் கண்டனத்தையும் துக்கத்தையும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், தெருநாய்கள் குறித்து நவம்பர் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்த சர்ச்சைகள் நிலவும் நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
