தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், இளம்பெண் ஒருவர் வீட்டில் உள்ள எறும்புகளுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணீஷா (25) என்ற அந்தப் பெண், கடந்த நவம்பர் 4ஆம் தேதி (2025) தனது குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டுச் சென்ற பிறகு, தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், “ஸ்ரீ… என்னை மன்னித்துவிடு. இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. என் குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்” என்று குறிப்பிட்டுள்ளது தெரியவந்தது.

மருத்துவ உலகத்தில் ‘மைர்மெகோஃபோபியா’ (Myrmecophobia) என்று அழைக்கப்படும் எறும்புகள் மீதான தீவிரமான பயத்தால் (Phobia) மணீஷா பாதிக்கப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்தே இந்தப் பயம் அவருக்கு இருந்ததாகவும், அதற்காக அவர் மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று, வீட்டைச் சுத்தம் செய்யும்போது அதிக எறும்புகளைக் கண்டதால் ஏற்பட்ட மன உளைச்சலும், தீவிர பயமுமே அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம், மனநலப் பிரச்சினைகள் மற்றும் அச்சக் கோளாறுகள் (Phobia) குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.