தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை, செவிலியராகப் பணிபுரியும் பெண்ணே ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். சமூக வலைத்தளம் வாயிலாக இளைஞர் ஒருவருடன் பழகி வந்த இவருக்கு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், ஜாதி மாறுபட்ட காரணத்தால் பெண்ணின் பெற்றோர் இக்காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது திருமணத்திற்குத் தடையாக இருக்கும் பெற்றோரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.

இதற்காக தான் பணிபுரியும் இடத்திலிருந்து மயக்க மருந்து மற்றும் ஊசிகளை ரகசியமாக வீட்டிற்கு எடுத்து வந்த அவர், தனது பெற்றோரிடம் உடல்வலிக்கு மருந்து செலுத்துவதாக நயமாகப் பேசி அவர்களை நம்ப வைத்துள்ளார். பின்னர் அவர்களுக்கு அதிக வீரியம் கொண்ட மயக்க ஊசியைச் செலுத்தியுள்ளார். மருந்தின் அளவு அதிகரித்ததால், இருவரும் மயக்க நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து, விவசாயக் கடன் தொல்லையால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதாகத் தனது சகோதரரிடம் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், மரணத்தில் சந்தேகம் அடைந்த சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், காதலுக்காகப் பெற்றோரைக் கொலை செய்ததை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.