பெருநகர வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க, மும்பையில் புதிதாக “அழுகை கிளப்” (Crying Club) கள் உருவாகி வருகின்றன. ‘தி க்ரையிங்க் கிளப்’ என பெயரிடப்பட்டுள்ள இக்கிளப்புகளில், தங்களின் கவலை, மன வேதனையை வெளிப்படுத்தி அழுது மனபாரத்தை குறைக்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இங்கு வருவோருக்கு டிஷ்யூ பேப்பர், டீ போன்றவை வழங்கி உற்சாகப்படுத்துகின்றனர். “ஒரு தடவை வந்து பாருங்கள், எப்படிக் கதற கதற அழவைக்கிறோம்” என்று ஏற்பாட்டாளர்கள் விளம்பரப்படுத்துகின்றனர். வாய்விட்டு அழுதால் மனபாரம் குறையும், ஸ்டிரஸ் நீங்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ‘அழுகை கிளப்’ டிரெண்ட், ஜப்பானில் நடைமுறையில் உள்ள ‘ருயிகாட்சு’ (Ruikatsu) என்ற உணர்வு சிகிச்சை முறையிலிருந்து வந்தது என அறியப்படுகிறது. முன்பாக, பெருநகரங்களில் ‘லாஃப்டர் கிளப்’ (Humour Club) எனும் சிரிப்பு மன்றங்கள் பிரபலமடைந்தது போல், தற்போது உருவாகி வரும் ‘அழுகை கிளப்’கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
