அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாணவனின் குடும்பத்தாருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களைப் பராமரிக்கச் செலவு செய்யாமல், “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று வீண் விளம்பரத்திற்காகச் செலவு செய்ததால்தான் இந்தக் கோரமான உயிரிழப்பைத் தடுக்க முடியவில்லை என்று அவர் தி.மு.க. அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தனது துறைப் பணிகளில் கவனம் செலுத்தாமல், நடிகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் நேரத்தைச் செலவிடுவதையும் அவர் கண்டனம் செய்துள்ளார்.
எனவே, உயிரிழந்த மாணவரின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என்றும் அவர் தி.மு.க. அரசை வலியுறுத்தியுள்ளார்.
