அமெரிக்காவின் 165 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக, இனிவரும் டாலர் நோட்டுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது. 1861-ஆம் ஆண்டு முதல் கருவூல அதிகாரிகளின் கையெழுத்து மட்டுமே டாலரில் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளார் டிரம்ப்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் அதிபரின் உருவப்படத்தை நோட்டுகளில் அச்சிடத் தடை இருந்தாலும், கையெழுத்தை அச்சிட அனுமதி இருப்பதால் வரும் ஜூன் மாதம் முதல் டிரம்ப்பின் கையெழுத்து அடங்கிய 100 டாலர் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.
இந்த அறிவிப்பு ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. ஈரான் போர் காரணமாக பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் அவதிப்படும் வேளையில், இத்தகைய அறிவிப்பு தேவையா என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“விலை உயர்வுக்கு நாம் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை இந்த கையெழுத்து மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்” என்று ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி சாண்டெல் பிரவுன் கிண்டலாகக் விமர்சித்துள்ளார்.
