அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்தப் புதிய நடவடிக்கையின் கீழ், சுற்றுலா மற்றும் வர்த்தகக் காரணங்களுக்காக பி-1 மற்றும் பி-2 விசா பெறும் பயணிகள், ரூ.13 லட்சம் (15,000 டாலர்கள்) மதிப்புள்ள பிணைப்பத்திரத்தை டெபாசிட் செய்ய வேண்டிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. இது சோதனை திட்டமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

2023-ம் நிதியாண்டில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை மீறி அமெரிக்காவில் தங்கியிருந்தனர் என உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் நோக்கில், குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள் டெபாசிட் செலுத்திய பிறகே விசா பெறும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்பதை திட்டம் அமல்படும் 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும்.

இந்த திட்டம் விசா காலத்தை மீறி தங்கும் வெளிநாட்டினரால் அமெரிக்கா சந்திக்கும் பாதுகாப்பு ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விசா காலம் முடிந்ததும் நாடு திரும்புவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

தேவைக்கேற்ப நாடுகளின் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், பயணிகள் மருத்துவ, சுற்றுலா, கல்வி காரணமாக வரும்போது விசாரணை மேற்கொண்டு டெபாசிட் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.