அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது கடுமையான வரி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளி அல்ல.
அவர்கள் நம்மிடம் எதையும் தருவதில்லை, ஆனால் நம்மிடம் பல விஷயங்களை எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார். மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் 150% முதல் 250% வரை வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், அமெரிக்காவில் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் உள்ளூர் மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த நிலையை சரிசெய்யவே மருந்துகளுக்கான வரியை அதிகரிக்கப்போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, “மருந்துகள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நம் பணியும் வளர்ந்திடும்” என்றார். இதற்கு ஒத்துழைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையிலான எண்ணெய்களை வாங்கி, அதனை பிற நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறது எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கும் எதிரான பொருளாதார நடவடிக்கையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் தான் அமெரிக்கா இந்தியா மீது கடும் வரிகளை விதிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
